வீட்டையொட்டி சென்ற மின்கம்பியால் விபரீதம் மாடியில் எலுமிச்சை பறித்தபோது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி: உறவினர்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர்: மாடியில் எலுமிச்சை பறித்தபோது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலியான சம்பவம் திருவள்ளூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியது. இதில் உறவினர்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூர் ஊராட்சி வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (30). இவரது மனைவி லோகேஸ்வரி (26). இவர் தனது வீட்டில் வளர்த்த எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை காயை பறிப்பதற்காக வீட்டின் மாடிக்குச் சென்று பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது வீட்டின் மாடி அருகே சென்ற 110 கே.வி திறன் கொண்ட மின்சாரம் பாய்ந்ததில் லோகேஸ்வரி தூக்கி வீசப்பட்டார். இதில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து லோகேஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே லோகேஸ்வரி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்திடமும், மின்சாரத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் 110 கே.வி.திறன் கொண்ட மின்கம்பிகளை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அகற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால்தான் இந்த விபத்து நேரிட்டது எனக்கூறி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவமனை எதிரே அமர்ந்து லோகேஸ்வரியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் டவுன் போலீசார் சமாதானப்படுத்தியும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் உயர்மின் கம்பியை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்சார வாரியம் அலட்சியம் காட்டியதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

எனவே லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் உயர் மின் அழுத்த கம்பியை அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுக்க காவல் காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே சாலை மறியல் போராட்டத்தின்போது மூதாட்டி ஒருவர் திடீரென மயக்கமடைந்து சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

The post வீட்டையொட்டி சென்ற மின்கம்பியால் விபரீதம் மாடியில் எலுமிச்சை பறித்தபோது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி: உறவினர்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: