பழநி: பழநியில் தனியார் மதுபாரில் கட்சியினருடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து மதுரையில் பாஜ மகளிரணி சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதில் கலந்துகொள்ள பழநியில் இருந்து புறப்பட்ட பாஜ மகளிரணியினரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
கைதான மகளிர் அணியினரை திண்டுக்கல் மாவட்ட பாஜ தலைவர் கனகராஜ் தலைமையில் அந்த கட்சியினர் சந்திக்க முயன்றனர். ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போலீசார்-பாஜவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கனகராஜ் தலைமையில் பாஜகவினர் அருகே உள்ள தனியார் மதுபான பாருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். போலீசாரைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதுகுறித்து தனியார் பார் நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின்பேரில், அத்துமீறி பாருக்குள் நுழைந்து மிரட்டல் விடுத்தது, கலவரம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கனகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுபாரில் புகுந்து ரகளை பாஜ நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.