பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூரில் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது

வேலூர், ஜன.4: வேலூரில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று திறந்து வைத்தார். வேலூர் டவுன் ஹாலில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் சுப்புலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தோடும் பொதுமக்களுக்கு நேரடியாக அவர்கள் விற்பனை செய்யும் வாய்ப்பாகவும், பூம்புகார் நிறுவனம் கண்காட்சிகளை நடத்துகின்றது. இவ்வாண்டும் பல சிறப்பு கண்காட்சிகளை கைவினைஞர்களும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் நாடெங்கும் நடத்தி வருவதோடு பண்டிகை காலங்களில் விழாக்கால கண்காட்சிகளை செம்மையாக நடத்தி வருகின்றது. இதன் ஒரு தொடர்ச்சியாக பூம்புகார் விற்பனை நிலையம் சேலம் நடத்தும் கைவினை திருவிழா என்ற சிறப்பு கைவினைப் பொருட்கள், கைத்தறி, துணி வகைகள், அலங்கார நகைகள் கண்காட்சியை நடத்தி வருகிறது.

இக்கண்காட்சி வரும் 13ம் தேதி வரை அனைத்து நாட்களில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக அனைத்து கைவினை கலைப் பொருட்களும் இடம் பெற்றுள்ளன. சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், நாச்சியார்கோவில் பித்தளை குத்து விளக்குகள், பித்தளை கலை பொருட்கள், தஞ்சாவூர் கலைதட்டுகள், தஞ்சாவூர் கலை ஓவியங்கள் மற்றும் ஏராளமான கைவினைப் பொருட்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் கைத்தறி தொடர்பான டாப்ஸ் வகைகள், பேன்சி சுடிதார் வகைகள், கலம் காரி பைகள், வண்ணம் அச்சிடப்பட்ட புடவைகள், பேன்சி சேலைகள், கைப்பைகள் போன்ற எண்ணற்ற வகையில் ஜவுளிகள் இடம் பெற்றுள்ளன.

முத்து, பவளம் மற்றும் நவரத்தின மாலைகள், ராசிக்கற்கள், ஸ்படிக மணிமாலைகள், ருத்தராட்ச மணி மாலைகள், பஞ்சலோக மோதிரங்கள், வளையல்கள், செம்பு காப்பு, கோமதி சக்கரம், கருங்காலி மாலைகள், பஞ்சலோக நகைகள் போன்ற பல வித பூஜை பொருட்கள் இடம் பெற்றுள்ளன. குறைந்தபட்சமாக ₹50 முதல் ₹65 ஆயிரம் வரையிலான கைவினை பொருட்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் ₹15 லட்சம் வரை விற்பனை இலக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு அம்சமாக 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். அனைத்து கடன் அட்டைகளுக்கும் எவ்வித சேவைக் கட்டணமும் இல்லை மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலமும் பண பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் பல்வேறு இடங்களில் இருந்து தருவிக்கப்பட்ட அழகிய கைவினை பொருட்களை வேலூர் மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி மகிழ்விக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மேலாளர் நரேந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூரில் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: