பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பு தீவிரம்


பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆரணியாற்றின் குறுக்கே காரணி-புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் மக்கள் சென்று வருவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த வடகிழக்கு பருவமழையின்போது, ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இந்த தரைப்பாலம் 2வது முறையாக அடித்து செல்லப்பட்டது. இதேபோல், ஆரணியாற்றின் குறுக்கே மங்களம் கிராமத்துக்கு செல்லும் மண்பாதையும் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால் மேற்கண்ட 2 கிராம பகுதிகளில் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக பெரியபாளையம் வழியாக சுமார் 10 கிமீ சுற்றி வருவதில் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதையடுத்து, கடந்த ஒரு மாதத்துக்கு பின் ஆரணியாற்றில் வெள்ளநீர் வடிந்த பிறகு, காரணி-புதுப்பாளைத்தை இணைக்கும் தரைப்பாலத்தை நேற்று முதல் தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஆரணியாற்றின் குறுக்கே நீர் செல்லும் வகையில் ராட்சத பைப் பதித்து, மண்கொட்டி தற்காலிக சாலையாக மாற்றி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்ததும் மக்களின் வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, காரணி-புதுப்பாளையத்தில் ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலத்துக்கு மாற்றாக, அங்கு கடந்த ஆண்டு ரூ20 கோடி மதிப்பில் புதிதாக உயர்மட்ட மேம்பாலப் பணிகள் துவங்கி, மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து, மழைக்காலத்துக்கு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: