கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி வடபழனி காவல் நிலையத்தில் டான்சர் தீக்குளிக்க முயற்சி: போதையில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு

அம்பத்தூர்: கணவருக்கு தெரியாமல் தன்னுடன் உல்லாசமாக இருந்த ஆண் நண்பருடன் சேர்த்து வைக்கக் கோரி, வடபழனி காவல் நிலையத்தில் போதையில் கிளப் டான்சர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வடபழனி காவல் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். மது போதையில் இருந்த அவர், ‘எனது ஆண் நண்பர், என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறினார்.

அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் இரவு ரோந்து பணிக்கு சென்றுவிட்டனர். காவல் நிலையத்தில் பாராவில் பெண் காவலர் ஆர்த்தி மட்டும் இருந்துள்ளார். இதனால் அவர், காலையில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படி, கூறி அனுப்பியுள்ளார். உடனே போதையில் இருந்த பெண், தனது மொபட் பெட்டியில் தயாராக பாட்டிலில் வைத்திருந்த ஒரு லிட்டர் பெட்ரோலை எடுத்து, தனது உடலில் ஊற்றி, எனக்கு நியாயம் வேண்டும். எனது ஆண் நண்பரை எனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும், என்று கூறி தீவைக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் காவலர் ஆர்த்தி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பெண் உடலில் தண்ணீரை உற்றி மீட்டார். பின்னர் சம்பவம் குறித்து இரவு பணியில் இருந்த எம்ஜிஆர் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்முக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அம்மு, தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் வடபழனி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், திருமணமாகி, கணவருடன் வசித்து வருவதும் தெரிந்தது. டான்சரான இவர், தற்போது இரவு நேர கிளப் ஒன்றில் டான்சராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு வடபழனி அழகிரி நகர் 3வது தெருவைச் சேர்ந்த அறிவழகன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அறிவழகன் கேட்டரிங் பணி செய்து வருகிறார். இவர், திருமணமாகி, தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இருந்தாலும், அப்பெண்ணும் அறிவழகனும் தங்களது வீட்டுக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் அறிவழகன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அறிவழகனிடம் அப்பெண் கேட்டுள்ளார்.

ஆனால் அறிவழகன் எனது மனைவியை விட்டு, நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன், தற்போது உள்ளதுபோல் எப்போது நாம் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணுக்கும், அறிவழகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அப்பெண், தனது காதலன் அறிவழகனை கிளப்பில் சந்தித்து இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறி அவர் தொந்தரவு செய்துள்ளார்.

அதற்கு அறிவழகன் மறுத்துள்ளார்.உடனே ஆத்திரமடைந்த பெண், ஒரு லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி மொபட்டில் வைத்துக்கொண்டு, வடபழனி காவல் நிலையத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அம்மு, போதையில் இருந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் கள்ளக்காதலன் அறிவழகனை போன் செய்து வரவழைத்து பிரச்னை தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறி இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தார்.

The post கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி வடபழனி காவல் நிலையத்தில் டான்சர் தீக்குளிக்க முயற்சி: போதையில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: