இளம்பெண்ணை அரை நிர்வாணமாக்கி தொழிலதிபரிடம் ரூ1.50 கோடி பறிக்க முயற்சி: துணை நடிகை உள்பட 7 பேர் கைது


திருமலை: இளம்பெண்ணை அரை நிர்வாணமாக்கி தொழிலதிபரிடம் ரூ.1.50 கோடி பறிக்க முயற்சி செய்த 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பாக்யாநகர் இரண்டாவது பகுதியை சேர்ந்தவர் ஷியாம்குமார் (35). சலூன் கடைக்காரர். இவர் 6 மாதங்களுக்கு முன் ஓங்கோலை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் ₹10 லட்சம் கடன் வாங்கினார். பல மாதங்களாகியும் கடனை திரும்ப தராததால், கடன் கொடுத்தவர் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்தார். இதனால் கடன் கொடுத்தவரிடம் இருந்தே பணத்தை பறிக்க ஷியாம்குமார் திட்டமிட்டார். இதற்காக தனக்கு தெரிந்த ஐதராபாத்தில் உள்ள துணை நடிகையான விஜயலட்சுமியை தொடர்பு கொண்டார். ஒருவரை மிரட்டி பணம் பறிக்க வேண்டும். அதற்கு பணம் தருவதாக கூறினார்.

இதனையடுத்து விஜயலட்சுமி துணை நடிகர்களான ஐதராபாத்தை சேர்ந்த பிரகாசம், சந்தாபுரம் சைலம், டோர்னாலா உள்ளிட்டவர்களிடம் தெரிவித்தார். போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க திட்டமிட்ட இவர்கள், ஐதராபாத் கிருஷ்ணா நகரில் சினிமாவுக்கு வாடகைக்கு துணி சப்ளை செய்பவர்களிடம் இருந்து நான்கு ஜோடி போலீஸ் சீருடைகள் வாங்கியுள்ளனர். கடந்த 29ம்தேதி மாலை 4.30 மணிக்கு ஷியாம்குமார், கடன் கொடுத்தவரிடம் போனில் தொடர்பு கொண்டு தனது அறைக்கு வந்தால் பணம் தருவதாக கூறினார். இதனால் அவரும் ஷியாம்குமார் சொன்ன அறைக்கு சென்றார். அந்த அறையில் ஒரு இளம்பெண் இருந்துள்ளார். அவரிடம் ‘ஷியாம்குமார் எங்கே’ என்று தொழிலதிபர் கேட்டார். அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி பிரகாசம் உள்பட 9 பேர் போலீசார் வேடத்தில் அங்கு வந்தனர். அவர்களில் ஒருவர் இளம்பெண் அணிந்திருந்த மோதிரத்தை திடீரென கழற்றி அரை நிர்வாணமாக்கினார்.

பெண் அலங்கோலமாக இருப்பது போல் சித்தரித்து வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்போகிறோம். இதை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக தொழிலதிபரை மிரட்டியுள்ளனர். ₹1.50 கோடி கொடுத்தால் இந்த நடவடிக்கை எடுக்க மாட்டோம் எனக்கூறியுள்ளனர். தன்னை மிரட்டி பணம் பறிப்பதற்காக ஷியாம்குமார் போட்ட நாடகம் என அறிந்துகொண்ட தொழிலதிபர், பணம் தருவதாகவும் அதற்கான ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனால் அவரை அந்த கும்பல் விடுவித்தது. உடனடியாக தொழிலதிபர், ஓங்கோல் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷியாம்குமார், துணை நடிகை விஜயலட்சுமி, சைலம், சுரேஷ், லட்சுமி, துர்காபிரசாத், வினோத்குமார் ஆகிய 7 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜு உள்பட 2பேரை தேடி வருகின்றனர்.

The post இளம்பெண்ணை அரை நிர்வாணமாக்கி தொழிலதிபரிடம் ரூ1.50 கோடி பறிக்க முயற்சி: துணை நடிகை உள்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: