திருமலை: திருப்பதி அருகே ஸ்டீல் தொழிற்சாலையில் பாய்லர்கள் வெடித்து சிதறியதில் 7 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பென்னேபள்ளியில் தனியார் ஸ்டீல் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்றிரவு ஷிப்டில் சுமார் 70 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் தொழிற்சாலையில் உள்ள 2 பாய்லர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை முழுவதும் தீ வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் 7 தொழிலாளர்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதனைக்கண்ட மற்ற தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஸ்டீல் தொழிற்சாலையில் பாய்லர்கள் வெடித்து 7 தொழிலாளர் படுகாயம் appeared first on Dinakaran.