முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு: சமையல் ஊழியர்கள் 5 பேர் கைது


திருமலை: மாநில முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கல்லூரி விடுதியின் மாணவிகள் குளியல் அறையில் கேமராக்கள் வைத்து 300 மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமையல் ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள பிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர், முன்னாள் அமைச்சர் மல்லாரெட்டி. இவர் தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இவருக்கு மெட்சல் நகரில் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவிகளுக்கு தனியாக விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதியில் உள்ள மாணவிகளின் குளியலறையில் கேமராக்கள் வைத்து ஆபாச வீடியோகள் எடுக்கப்பட்டிருப்பதாக நேற்று புகார் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதி வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது மாணவ, மாணவிகள், ‘சுமார் 300 மாணவிகளின் வீடியோக்களை ஆபாசமாக பதிவு செய்துள்ளதாகவும், அவை சமூக வலைதளங்களில் கசிந்தால் எம்எல்ஏ மல்லாரெட்டி தான் பொறுப்பேற்க வேண்டும்’ எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். பின்னர் விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஊழியர்களிடம் இருந்து 12 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், விடுதி சமையலறை ஊழியர்களுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சமையல் ஊழியர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இதற்கிடையில், எதிர்காலத்தில் இதுபோன்ற தனியுரிமை மீறல்களைத் தவிர்க்கும் வகையில் விடுதியில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு: சமையல் ஊழியர்கள் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: