சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து : 26 பெண் கூலித்தொழிலாளர்கள் படுகாயம்

தண்டராம்பட்டு, ஜன.1: தண்டராம்பட்டு அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 26 பெண் கூலித்தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் குளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன்(50). சொந்தமாக சரக்கு வேனை ஓட்டி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை விவசாய கூலி வேலைக்காக சரக்கு வேனில் அழைத்து சென்று வருவது வழக்கமாம்.

அதேபோல், நேற்று காலை மணிலாவில் களைகளை வெட்டுவதற்காக, குளத்துமேட்டு பகுதியை சேர்ந்த 26 பெண் கூலித்தொழிலாளர்களை நாச்சானந்தல் கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், மாலை அவர்களை வேனில் அழைத்து கொண்டு ஊர் திரும்பினார். வரகூர் அண்ணா நகர் அருகே வந்தபோது, திடீரென டிரைவர் முருகனின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் அருகில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜெயா(55), கண்ணம்மாள்(38), மலர்(42) என்பவர்கள் உட்பட 26 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவ்வழியாக சென்றவர்கள் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ், வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 26 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து : 26 பெண் கூலித்தொழிலாளர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: