அண்ணாமலையார் கோயிலில் ₹2.18 கோடி மகாதீப நெய் காணிக்கை பக்தர்கள் வருகை அதிகரித்தால் காணிக்கை உயர்ந்தது கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு

திருவண்ணாமலை, ஜன.4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகாதீபம் நெய் காணிக்கையாக ₹2.18 ேகாடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த மாதம் 13ம் தேதி மகாதீப பெருவிழா நடந்தது. அப்போது, 2,688 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. மலை மீது மகாதீபம் கடந்த 11 நாட்களாக காட்சியளித்தது. இந்நிலையில், அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றுவதற்கு சுமார் 4,500 கிலோ முதல்தர தூய நெய் மற்றும் 1,500 மீட்டர் திரி ஆகியவை பயன்படுத்தப்பட்டது. மேலும், மகாதீபம் ஏற்றுவதற்கான நெய் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்படுகிறது. அதையொட்டி, நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் நெய் காணிக்கை செலுத்த, ஒரு கிலோ நெய் ₹250, அரை கிலோ நெய் ₹150, கால் கிலோ ₹80 என்ற அடிப்படையில் ரொக்கமாகவும், காசோலை மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மூலமாகவும் காணிக்கை பெறப்பட்டது. அதற்காக, தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற கடந்த மாதம் 4ம் தேதி முதல், மலை மீது மகாதீபம் காட்சியளித்த 23ம் தேதி வரை நெய் காணிக்கை பெறுவதற்கான சிறப்பு பிரிவு அண்ணாமலையார் கோயிலில் செயல்பட்டது. இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீப நெய் காணிக்கையாக, ஒரு கிலோ நெய் காணிக்கை ₹1.09 ேகாடி, அரை கிலோ நெய் காணிக்கை ₹23.76 லட்சம், கால் கிலோ நெய் காணிக்கை ₹25.95 லட்சம், ஆன்லைன் மூலம் ₹54.56 லட்சம், காசோலையாக ₹5.66 லட்சம் உள்பட மொத்தம் ₹2 கோடியே 18 லட்சத்து 97 ஆயிரத்து 383ைய பக்தர்கள் ஆர்வமுடன் செலுத்தியுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு தீபத்திருவிழா நெய் காணிக்கையாக ₹1.71 ேகாடியும், கடந்த 2023ம் ஆண்டு நெய் காணிக்கையாக ₹1.76 கோடியும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். நடந்து முடிந்த தீபத்திருவிழாவில், பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்ததோடு கோயிலுக்குள் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனால், நெய் காணிக்கை இதுவரை எப்போதும் இல்லாத அளவில் ₹2.18 கோடியாக அதிகரித்துள்ளது.

The post அண்ணாமலையார் கோயிலில் ₹2.18 கோடி மகாதீப நெய் காணிக்கை பக்தர்கள் வருகை அதிகரித்தால் காணிக்கை உயர்ந்தது கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: