பிரசவத்தில் தாய், குழந்தை பலி போலீஸ் விசாரணை ஆரணியில் சோகம்

ஆரணி, டிச. 27: ஆரணி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த பிரசவத்தில் தாய், குழந்தை பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(42), நெசவு தொழிலாளி. இவரது மனைவி அருணா(27). இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது, அருணா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், அருணா நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு கோலம் போட்டுள்ளார். இதனால், அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் அருணாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆற்காடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்றுள்ளார். அப்போது, மருத்துவர்கள் அருணாவுக்கு அறுவை சிகிச்சை செய்துதான், குழந்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர். அதற்கு, அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து, அருணாவிற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது, இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், அருணாவின் உடல்நிலை மிகவும் கவலைகிடமானதால், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அருணா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, அருணாவின் கணவர் சரவணன் நேற்று ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவத்திற்காக அனுமதித்த தாய் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post பிரசவத்தில் தாய், குழந்தை பலி போலீஸ் விசாரணை ஆரணியில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: