கண்ணமங்கலம், ஜன.1: படவேடு தாமரை ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதையொட்டி கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் சம்புவராயர் காலத்து பழமையான தாமரை ஏரி உள்ளது. பண்டைய காலத்தில் இங்குள்ள உலக பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் கோயிலுக்கு இந்த ஏரியில் இருந்து தான் தண்ணீர் மற்றும் தாமரை மலர்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏரி நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடந்த 25 வருடங்களாக ஏரி நிரம்பாமல் இருந்து வந்தது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி தலைவர் சீனிவாசன் தனது சொந்த செலவில் ஏரி கால்வாய்களை சீரமைத்து ஏரிக்கு நீர்வர ஏற்பாடு செய்திருந்தார். அதில் இருந்து ஏரியில் வருடம் முழுவதும் நீர் நிரம்பி வற்றாமல் இருந்து வருகிறது. மேலும், இந்த ஆண்டு 3வது முறையாக ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் கிராம மக்கள் உபரிநீர் வெளியேறும் இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி வழிபட்டனர். பின்னர், அனைவருக்கும் பிரசாதமும் இனிப்பும் வழங்கினர்.
தொடர்ந்து ஏரியில் தாமரை அதிக அளவில் வளர்வதற்காக தாமரைக் கிழங்குகளை விதைத்தனர். இதில், துணைத்தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், கள இயக்குனர் கணேஷ்குமார், முன்னாள் துணை சேர்மன் ரகு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post படவேடு தாமரை ஏரி நிரம்பியது: கிராம மக்கள் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.