மலை மீது புனிதநீர் தெளித்து பிராயசித்த பூஜை திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட

திருவண்ணாமலை, ஜன.4: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்ட மலையில், புனிதநீர் தெளித்து பிராயசித்த சிறப்பு பூஜை நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 13ம் தேதி 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம், கடந்த 23ம் தேதியுடன் நிறைவடைந்தது. மலையில் மண் சரிவு ஏற்பட்ட காரணத்தால், மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை, ஆனாலும், மகாதீபம் ஏற்றும் திருப்பணியை செய்வோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மலை மீது சென்றனர்.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள தீபமலை சுயம்பு வடிவானது. இறைவனின் திருமேனியாக காட்சியளிக்கிறது. எனவே, அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சியளித்த இறை வடிவான மலை மீது, பக்தர்கள் செல்வது ஆன்மிக மரபு கிடையாது. எனவே, மகாதீபம் ஏற்றும் திருப்பணிக்காகவும், அதனை தரிசிப்பதற்காகவும் மலை மீது சென்றதற்கான பிராயசித்த வழிபாடு ஆண்டுதோறும் தீபத்திருவிழா முடிந்ததும் நடப்பது வழக்கம். அதன்படி, மலை மீது நேற்று புனிதநீர் தெளித்து பிராயசித்த வழிபாடு நடந்தது. அப்போது, உம்முடைய திருப்பணியை நிறைவேற்றவே மலை மீது சென்றோம், எங்களை பொறுத்தருள்க என வேண்டி மலை உச்சியில் அமைந்துள்ள சுவாமி பாதத்தில் வழிபாடு நடத்தப்பட்டது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காட்சி தரும் அண்ணாலையார் பாதம் மற்றும் மகாதீப கொப்பரை வைக்கப்படும் மலை உச்சி ஆகியவற்றில் புனிதநீர் தெளித்து பிராயசித்த பூஜைகள் செய்யப்பட்டன.

The post மலை மீது புனிதநீர் தெளித்து பிராயசித்த பூஜை திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட appeared first on Dinakaran.

Related Stories: