திருச்சியில் களைகட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்

திருச்சி, ஜன.1: 2025ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருச்சி மாநகர் நேற்றிரவு விழாக்கோலம் பூண்டது. உலகில் பரவிக்கிடந்த பல்வேறு மனித இனங்கள் தங்கள் மதங்கள், மொழிகளை அடிப்படையாக கொண்டு தங்களுக்கென ஒரு காலண்டரை (நாள்காட்டி) அமைத்துக் கொண்டனர். இயேசு கிருஸ்து பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் ஜூலியட் சீசர் உருவாக்கிய காலண்டருக்கு ஜூலியன் காலண்டர் என்று பெயர். இந்த காலண்டரில் இருந்துதான் ஜனவரி.1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் உருவானது. இதையே இன்றளவும் உலகம் புத்தாண்டாக கொண்டாடி வருகிறது.

இந்தியாவில் கிருஸ்துவ மதம் பரவத்துவங்கிய காலத்தில் புத்தாண்டு அறிமுகமாகி இருந்தாலும், ஆங்கிலேயர் வருகைக்கு பின்னரே இந்தியாவில் புத்தாண்டு கொண்டாடும் பழக்கம் துவங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தாண்டு இந்தியாவில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டு புத்தாண்டு நேற்று பல்வேறு நகரங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சியிலும் வெகு விமர்சையாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நகரம் முழுவதும் நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது. எங்கு திரும்பினாலும் வண்ண, வண்ண விளக்குகளின் ஒளியில் மாநகரமே மின்னியது. முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பெரிய கடைவீதி, மெயின்கார்டுகேட், சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், ரயில் நிலையப்பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் மின் விளக்குகளால் அலங்கரித்திருந்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சர்ச்சுகளில் விஷேச திருப்பலிகள், ஆராதனை கூட்டங்கள், பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தன. மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். புத்தாண்டு தினத்தன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாதபடி மாநகர கமிஷனர் காமினி தலைமையில், கூடுதலாக 350 போலீசார் நேற்று மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

The post திருச்சியில் களைகட்டியது புத்தாண்டு கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: