திருச்சி, டிச. 16: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அரசாணைப்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 404 கிராம ஊராட்சிகளில் 4 கிராம ஊராட்சிகளை பிரித்து 8 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை திருச்சி மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கிராம ஊராட்சிகளைப் பிரித்து உருவாக்கப்படும் புதிய கிராம ஊராட்சிகள் அடுத்து வரும் சாதாரண தோ்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும் எனவும், அந்த உள்ளூர் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வரும் எவரும் திருச்சி மாவட்ட அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு வாரங்களுக்குள் இந்த அறிவிக்கை குறித்த மறுப்பினை தொிவிக்க விரும்பினால் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த உள்ளூர் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வரும் எவாிடமிருந்தும் மேலே கூறப்படும் காலக்கெடுவிற்குள் மறுப்பு ஏதும் பெறப்பட்டால் அதனை உரிய பாிசீலனை செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
