பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி இருந்த அரசு பஸ்சை திருடிச்சென்று மட்டையான வாலிபர்


திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு – எடப்பாடி மற்றும் ஆட்டையாம்பட்டி வழித்தடத்தில் திருச்செங்கோடு டெப்போவை சேர்ந்த எஸ்-9 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் பஸ் டிரைவர் பச்சமுத்து, திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு உணவு சாப்பிட சென்றார். கண்டக்டர் சின்ராசு நேரக்காப்பாளர் அலுவலகத்திற்கு கையெழுத்திட சென்றுவிட்டார். டிரைவர் பச்சமுத்து திரும்பி வந்து பார்த்தபோது, அவர் நிறுத்தி இருந்த பஸ் காணாமல் போனதை பார்த்து திடுக்கிட்டார். இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து இரவு முழுவதும் திருடப்பட்ட பஸ்சை போலீசார் தேடி வந்த நிலையில், அந்த பஸ் சங்ககிரி அருகேயுள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு அருகே இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, போதையில் ஒரு வாலிபர் பஸ்சில் படுத்திருந்தார். இதையடுத்து பஸ்சையும், பஸ்சில் படுத்திருந்த வாலிபரை மீட்டு, போலீசார் திருச்செங்கோடு கொண்டு வந்தனர். குடிபோதையில் இருந்த நபரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சுயநினைவுக்கு வந்த பின்பு, பாலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த வேலு மகன் சண்முகம் (21) என்பது தெரியவந்தது. இவர் ரிக் வண்டி டிரைவராக பணியாற்றினார். திருச்செங்கோட்டிற்கு வேலை தேடி வந்தபோது, புத்தாண்டு என்பதால் அதிகமாக மது அருந்தியுள்ளார். மது போதையில் அரசு பஸ்சை ஓட்டிச் சென்றதும் தெரிய வந்தது. அவர் எப்படி பஸ்சை ஸ்டார்ட் செய்தார் என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அவர் மீது அரசு பஸ்சை திருடிச் சென்றதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சண்முகத்தை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி இருந்த அரசு பஸ்சை திருடிச்சென்று மட்டையான வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: