கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே நேற்றிரவு வேலை முடிந்து வீடு திரும்பிய இளம்பெண் கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தவர் தீபா (32). இவரது கணவர் மாதேஷ் இறந்துவிட்டார். இவர்களுக்கு கௌசிக் தரன் (12) என்ற மகனும், சிவானி (10) என்ற மகளும் உள்ளனர். தீபா கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி முதல் போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் கம்பெனியில் உள்ள கேண்டீனில் வேலை செய்து வந்தார். தினமும் வேலைக்கு டூவீலரில் சென்று விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இதேபோல் நேற்றிரவு 11 மணிக்கு வழக்கம் போல் பணியை முடிந்து தீபா வீட்டிற்கு புறப்பட்டார். வழியில் ஜேரிகேபள்ளியில் பங்கில் பெட்ரோல் பங்க்கில் வண்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு சென்று கொண்டிருந்தார்.
இதனிடையே தீபா, தன்னை 2பேர் பின்தொடர்ந்து வருவதாக, அவரின் நண்பரான கவுதம் (22) என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அப்போது கவுதம், தீபாவிடம் வீட்டிற்கு மெதுவாக செல்லுங்கள், நான் உடனே அங்கு வருகிறேன் என கூறினார். சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் தீபாவிற்கு கவுதம் போன் செய்துள்ளார். ஆனால் எதிர் திசையில் தீபா பேசவில்லை. அவரின் அலறல் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. இதையடுத்து கவுதம், விரைந்து சென்று பார்த்தபோது கஞ்சனூர் முருகன் கோயில் அருகில் தீபா உடலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தீபா உயிர் இழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே பள்ளசூளகிரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கவுதமிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஒன்றாக கூலி வேலைக்கு சென்றபோது தீபாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளது தெரியவந்தது. மேலும் தீபாவிற்கும், அவர் சமத்துவபுரத்தில் கணவருடன் வசித்த போது பக்கத்துவீட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மிதுன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவருடனும் தீபா அடிக்கடி பேசி வந்தார். இதனால் மிதுன் மீது சந்தேகம் இருப்பதாக கவுதம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மிதுன் தலைமறைவாகி விட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. தலைமறைவான அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தீபாவுக்கும் மிதுனுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்த நிலையில் அவருடனான தொடர்பை கைவிட்டு கவுதமுடன் பழகி வந்துள்ளார். இதனால் மிதுன் ஆத்திரம் அடைந்து தீபாவை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
The post வேலை முடிந்து வீடு திரும்பியபோது இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை: கள்ளக்காதல் விவகாரம் காரணமா? appeared first on Dinakaran.