திருவாரூர், டிச. 30: திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு பொது மக்கள் மற்றும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், 2ம் வெண்மை புரட்சியை ஏற்படுத்திடவும் கால்நடை துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தமிழகம் முழுவதும் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் இப்பணிகளை மேற்கொள்வதற்காக 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆம்புலன்ஸ் சேவையானது துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கால்நடைகளுக்காக தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நடப்பு நிதியாண்டிற்கு (2024-25) ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 10 ஒன்றியங்களுக்கும் ஆயிரம் பயனாளிகளுக்கு ஏழ்மை நிலையிலுள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (40 கோழிக்குஞ்சுகள், ஒரு பயனாளி) 50 சதவிகித மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. 21வது கால்நடை கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் கடந்த அக்டோபர் 25ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப்பணியினை மேற்கொள்ள திருவாரூர் மாவட்டத்தில் 576 வருவாய் கிராமங்களில் கணக்கெடுக்க 103 எண்ணிக்கை கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 25 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முகப்பயிற்சி மற்றும் களப்பயிற்சி வழங்கப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பாளர்கள் தங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும்போது பொது மக்கள் மற்றும் விவசாயிகள் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, உரிய விவரங்களை அளித்து கால்நடை கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெறவும், எதிர்காலத்தில் கால்நடைகள் வளம் மற்றும் நலத்துடன் மனிதர்களுக்கான உணவுப்பாதுகாப்பு மற்றும் திட்டமிடவும் தேவையான தரவுகளை அளித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு விவசாயிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.