ராஜேந்திரபாலாஜி – மாஜி எம்எல்ஏ ஆதரவாளர்கள் மோதல் ‘வெடித்தது’ வீடு புகுந்து தாக்கியதால் ஆத்திரம் அதிமுக நிர்வாகி துப்பாக்கிச்சூடு: கிளை செயலாளர் கைது

திருச்சுழி: நரிக்குடி அருகே வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அதிமுகவினரை மிரட்ட மாவட்ட நிர்வாகி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிமுக கிளை செயலாளர் கைதானார். விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி, முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் இடையே கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளது. விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளராக தச்சனேந்தல் சந்திரன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான பூமிநாதன் இந்த பதவியில் இருந்தார். திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டு ராஜவர்மனின் ஆதரவாளரான தச்சனேந்தல் சந்திரனுக்கு பதவி வழங்கியது ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியது. நரிக்குடி ஒன்றிய அதிமுக வாட்ஸ்அப் குரூப்பில், நேற்று முன்தினம் நள்ளிரவு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து ராஜவர்மன் ஆதரவாளர்கள் அவதூறாக பதிவிட்டதாக தெரிகிறது. இதை பார்த்த ராஜேந்திரபாலாஜி ஆதரவாளரும், விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளரும், திரைப்பட இயக்குநருமான பிரபாத் கண்டித்து பதிவிட்டார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது.

நேற்று நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் எஸ்.கல்விமடையில் உள்ள பிரபாத்தின் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பிரபாத்தின் மகன் மிதின் சக்கரவர்த்தி, மனைவி நரிக்குடி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஆனந்தவல்லி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாத் உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியை தற்காப்பிற்காக வானத்தை நோக்கி சுட்டார். துப்பாக்கி குண்டு வீட்டின் மேற்கூரையில் பட்டு சிதறியது. இதனால் அச்சமடைந்த சந்திரன் ஆதரவாளர்களுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அ.முக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி டிஎஸ்பி பொன்னரசு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட சந்திரன் தரப்பை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் மீது அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தாமரைக்குளம் அதிமுக கிளை செயலாளர் தனுஷ்கோடி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் கல்விமடை கிராம நிர்வாக அலுவலர் ரகுநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில், அதிமுக நிர்வாகி பிரபாத் மீது தற்காப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சுழி தொகுதியில் அதிமுக கோஷ்டி மோதல் துப்பாக்கிச்சூடு வரை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ராஜேந்திரபாலாஜி – மாஜி எம்எல்ஏ ஆதரவாளர்கள் மோதல் ‘வெடித்தது’ வீடு புகுந்து தாக்கியதால் ஆத்திரம் அதிமுக நிர்வாகி துப்பாக்கிச்சூடு: கிளை செயலாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: