திருச்சியில் இருந்து மலேசியா கிளம்பிய விமானத்தில் திடீர் கோளாறு அவசரமாக தரையிறக்கம்: 140 பயணிகள் தப்பினர்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு மேலே ஏறிய விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து, விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 140 பயணிகள் உயிர் தப்பினர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் (24ம்தேதி) நள்ளிரவு 12.10 மணிக்கு மலேசியா தலைநகர் கோலாம்பூர் செல்வதற்காக விமானம் புறப்பட தயாரானது. இதில் 140 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு, ஓடுபாதையை விட்டு மேல ஏற துவங்கிய போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, விமானம் மேலும் உயரே செல்ல முடியவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததுடன், விமானத்தை சாமர்த்தியமாக மீண்டும் ஓடு தளத்திலேயே இறக்கினார். விமானம் கட்டுபாட்டுக்குள் வந்தது உறுதி செய்யப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த உடன், தீயணைப்பு துறை உள்ளிட்ட பாதுகாப்பு குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இதையடுத்து 140 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப கோளாறால் விமானம் தரையிக்கப்பட்டது அவர்களுக்கு பின்னர்தான் தெரிய வந்தது. மேலும், பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. டெல்லியில் இருந்து வந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்தனர். பழுது சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் 25ம்தேதி (நேற்று) நள்ளிரவு 12.10 மணிக்கு விமானம் மலேசியா புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 140 பயணிகளில், 70 பேர் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்றனர். மற்றவர்கள் காத்திருந்து மாற்று விமானத்தில் சென்றனர்.

The post திருச்சியில் இருந்து மலேசியா கிளம்பிய விமானத்தில் திடீர் கோளாறு அவசரமாக தரையிறக்கம்: 140 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: