மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து: 4 குழந்தைகள் உள்பட 34 பேர் படுகாயம்

விக்கிரவாண்டி: மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று திரும்பிய வேன், விக்கிரவாண்டி-சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை திடீரென்று கவிழ்ந்ததால் நான்கு குழந்தைகள் உட்பட 34 பேர் படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் இருந்து 20 பெண்கள், பத்து ஆண்கள் உள்பட 34 பேர் வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இன்று அதிகாலை கோவை ஈஷா மையத்திற்கு அதே வேனில் சென்று கொண்டிருந்தனர். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் வடக்கு பைபாஸ் அருகே வேன் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென பேருந்து ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது இதைகண்ட வேன் ஓட்டுநர் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாதவன் திடீர் பிரேக் போட்டுள்ளார்.

அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் இடிபாட்டுக்குள் சிக்கிய பக்தர்கள் அலறி துடித்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பக்தர்கள் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து: 4 குழந்தைகள் உள்பட 34 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: