கிராமப்புற மாணவர்கள் மேல்படிப்புக்கு செல்வதை தடுக்கவே ‘ஆல்பாஸ்’ ரத்து: கே.பாலகிருஷ்ணன் தாக்கு

நாகை,: கிராமப்புற மாணவர்கள் மேல்படிப்புக்கு செல்வதை தடுக்கவே ஒன்றிய அரசு ஆல்பாஸ் முறையை ரத்து செய்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழவெண்மணியில் நேற்று தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: மத்திய ஆட்சி பொறுப்பில் உள்ள மோடி அரசாங்கம் இந்த நாட்டின் எல்லா வளங்களையும் கார்பரேட் முதலாளிகளுக்கு தரைவார்த்து கொண்டு இருக்கிறது.

நகர்புறத்தில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் எல்லாம் ஒப்பந்த தொழிலாளர் என்று பணியமர்த்தப்படும் நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். அம்பேத்கரை அவமதித்து பேசியதற்காக அமித்ஷா இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவது மட்டும் அல்ல, பேசியது தவறு எனபதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறையை ரத்து செய்துள்ளார்கள். தமிழ்நாடு அரசு அதை ரத்து செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளது. கிராமபுறத்தில் இருக்கும் சாதாரண, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அடிக்கடி தேர்வு வைத்து வடிகட்டி அவர்களின் மேல் படிப்பு தொடராமல் இருக்க ஒன்றிய அரசு நினைக்கிறது.

ஒவ்வொரு சாதிக்கும் இட ஒதுக்கீடு என்றால் அந்த இட ஒதுக்கீடு எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றினால் நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம் என்கிறார்கள். இவர்கள் ஆதரவு இல்லாமல் தான் அரசாங்கம் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கிராமப்புற மாணவர்கள் மேல்படிப்புக்கு செல்வதை தடுக்கவே ‘ஆல்பாஸ்’ ரத்து: கே.பாலகிருஷ்ணன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: