அமெரிக்கா ஏவுகணையை நிறுத்தும் முடிவால் சீனா – பிலிப்பைன்ஸ் இடையே போர் பதற்றம்: தென்சீனக் கடற்பகுதியில் பரபரப்பு

மணிலா: அமெரிக்கா ஏவுகணையை நிறுத்தும் முடிவால் சீனா – பிலிப்பைன்ஸ் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தென்சீனக் கடற்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் சீனக் கடற்பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் அப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிடையே கவலையை அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு எதிராகவும், அப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளுக்கு ஆதரவாகவும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. தென்சீனக் கடற்பகுதியில் சீனா மற்றும் சீன எதிர்ப்பு நாடுகள் அவ்வப்போது போர் பயிற்சியை பார்ப்பதால் பதற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் நாட்களில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவை ஒட்டிய எல்லையை நோக்கி ஏவுகணையை அனுப்ப பிலிப்பைன்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் அமெரிக்க நடுத்தர தூர ஏவுகணையான டைபூனை எல்லையில் நிறுத்த பிலிப்பைன்ஸ் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கு சீனா தரப்பில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை செய்து வருவதை சீனா எதிர்த்து வரும் நிலையில், தற்போது சீனாவை நோக்கி ஏவுகணையை நிறுத்தப் போவதாக பிலிப்லைன்ஸ் அறிவித்து இருப்பது மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், ‘எல்லையில் ஏவுகணையை நிறுத்துவதாக பிலிப்பைன்ஸ் கூறியிருப்பதை கண்டிக்கிறோம். இந்த முடிவால் மோதல் அதிகரிக்கும். நாடுகளுக்கு இடையிலான ஆயுதப் போட்டியை வேகப்படுத்தும்’ என்றார். இதற்கிடையே பிலிப்பைன்ஸ் லெப்டினன்ட் ஜெனரல் ராய் கலிடோ அளித்த பேட்டியில், ‘அமெரிக்காவிடமிருந்து மட்டுமல்லாமல் மற்ற நட்பு நாடுகளிலிருந்தும் ஆயுதங்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பிற நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.

The post அமெரிக்கா ஏவுகணையை நிறுத்தும் முடிவால் சீனா – பிலிப்பைன்ஸ் இடையே போர் பதற்றம்: தென்சீனக் கடற்பகுதியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: