நாகப்பட்டினம்,டிச.24: பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழு, வாசகர் வட்டம் ஆகியவை சார்பில் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவப்பட்ட 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி கொண்டாடங்கள் தொடக்க விழா நாகப்பட்டினம் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ஸான்பாஷா வரவேற்றார். கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:
திருவள்ளுவர் புகழ்பெற்ற தமிழ்க்கவிஞரும் அறிஞரும் ஆவார், அவர் எழுதிய திருக்குறளில் நெறிமுறைகள், பொருளாதாரம் போன்ற விஷயங்களை பற்றிய இரட்டை வரிகளின் வெளிப்படுத்தியுள்ளார். திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருக்குறள் 133 அத்தியாயங்களைக் குறிக்கிறது. திருவள்ளுவரின் சிற்பம் 95 அடி (29 மீட்டர்) மற்றும் இது 38 அடி (12 மீட்டர்) பீடத்தில் நிற்கிறது. இது குறள் உரையின் மூன்று புத்தகங்களில் முதல் அறத்தின் 38 அத்தியாயங்களைக் குறிக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது புத்தகங்கள் முறையே செல்வம் மற்றும் அன்பு சிலை மூலம் குறிப்பிடப்படுகின்றன.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஒரு அற்புதமான கலைப் படைப்பு மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக தலைசிறந்த படைப்பாகும். வெகுதொலைவில் இருந்து பார்க்கும் திருவள்ளுவர் சிலையின் கம்பீரம் பார்ப்பதற்கு ஒரு காட்சி. இது 41 மீட்டர் உயரத்தில் உள்ளது. சிலை மற்றும் பீடத்தின் மொத்த உயரம் 133 அடி (41 மீட்டர்) ஆகும். திருவள்ளுவரின் சிலை 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி மறைந்த முதல்வர் கருணாநிதியால் தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நேற்று(23ம் தேதி) முதல் வரும் 31 ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க பேச்சுப்போட்டி, வினாடி வினா மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. வரும் 26ம் தேதி பேச்சுப்போட்டி, 27ம் தேதி வினாடி வினா போட்டி மற்றும் 30ம் தேதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நாகப்பட்டினம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகர்களும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் கலந்துகொள்ளலாம். பேச்சுப்போட்டியில் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் திருக்குறளில் ஏதேனும் 5 அதிகாரங்களில் குழந்தைகள் பொருள் உணர்ந்து உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்.
இவ்வெள்ளி விழா நிறைவு நாள் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறுபவர்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகையாக வரும் 31ம் தேதி வழங்கப்படும். மேலும் திருவள்ளுவரின் வரலாறு பற்றியும், திருக்குறளை பற்றியும் நூலகத்துறையினால் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவரின் வரலாறு பற்றியும், திருக்குறளை பற்றியும் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சிகள் மற்றும் புத்தகங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இதுவரை 5 இயற்கை பேரிடர்களை சந்தித்துள்ளது. ஆனால் இதுநாள் வரை எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கம்பீரமாக உள்ளது. இதுதான் திருவள்ளுவரின் பெருமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மைய இரண்டாம் நிலை நூலகர் சிவக்குமார் நன்றி கூறினார்.
The post கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா: மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி appeared first on Dinakaran.