சீர்காழி நூலகத்தில் திருக்குறள் தொடர்பான கண்காட்சி

சீர்காழி,டிச.24: சீர்காழி முழுநேர கிளை நூலகத்தில் திருக்குறள் தொடர்பான கண்காட்சியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முழு நேர கிளை நூலகத்தில் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவிய வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருக்குறள் தொடர்பான கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நூலகர் வாசகர் வட்ட முன்னாள் தலைவர் வீரசேகரன் தலைமை வகித்தார். திருக்குறள் பண்பாட்டு பேரவை தலைவர் சக்கரபாணி, தலைமையாசிரியர் அறிவுடை நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் வெங்கடேசன் வரவேற்றார்.

மாவட்ட கலெக்டர் மகாபாரதி குத்துவிளக்கேற்றி வைத்து, திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளதையொட்டி, வெள்ளி விழா கொண்டாட தமிழக அரசு திட்டமிடப்பட்டு, அதன்படி, பொது நூலக இயக்ககம் சார்பில் சீர்காழியில் முழு நேர கிளை நூலகத்தில் திருக்குறள் தொடர்பான கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககத்தால் 52 நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. 4 முழுநேர கிளை நூலகம், 24 கிளை நூலகம், 23 ஊர்ப்புற நூலகம், 1 பகுதிநேர நூலகம் உள்ளது. முழுநேர கிளை நூலகங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் , போட்டி தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் இலவச wiFi வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் படிக்கும் போட்டி தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இணையவழி போட்டி தேர்வு பயிற்சிகள் நடத்தப்படுகிறது. சீர்காழி கிளை நூலகத்தின் சார்பில் இராமன், பீரவின் குமார் மற்றும் சிவா என்கின்ற போட்டி தேர்வாளர்கள் இந்நூலகத்தினை பயன்படுத்தி தேர்வில் பெற்றுள்ளார்கள் என்பது தனிச்சிறப்பு.

எனவே, நூலகத்தினை பயன்படுத்தி புத்தகங்களை வாசித்து பழக வேண்டும். புத்தக வாசிப்பு என்பது அறிவு மற்றும் ஆற்றல் திறனை பெருக்க மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் சீர்காழி நகராட்சி ஆணையர் மஞ்சுளா, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, நூலக வாசகர் வட்ட சிறப்பு தலைவர் இளங்கோ துணைத் தலைவர் தங்கசேகர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சமுக பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேல், நூலகர் அறிவரசு, நூலக உதவியாளர் அசோகன் செய்திருந்தனர். முடிவில் கிளை நூலகர் அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.

 உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்கவும்
 முதல் பரிசு ₹5 ஆயிரம்

The post சீர்காழி நூலகத்தில் திருக்குறள் தொடர்பான கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: