பெரம்பலூர்,டிச.24: சாமி ஊர்வலத்தில் உரிமைகள் பெற்றுத்தர வேண்டும் என பாளையம் கிராமப் பொது மக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம், குரும்பலூர் பேரூராட்சி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. பாளையம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது இந்த கோவிலை புது வர்ணம் பூசி பொலிவுடன் பராமரிப்பு பணிகள் மேற் கொண்டு வருகின்றனர். இந்த கோவிலுக்கான கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவில் திருவிழா காலங்களில் 4-நாட்கள் சாமி ஊர்வலம் நடத்துவது வழக்கம். கடந்த 2009 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்ற போது ஊரில் உள்ள குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர், எங்கள் சமூகத்தினருக்கு ஆகம உரிமைகள்இல்லை என்று மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சனைக்கு, வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. அப்போது சாமி ஊர்வலம் வரும் போது இருசமூகத்தினரும் சாமி இழுத்துக் கொள்ளலாம், பழைய சம்பிரதாயங்களை வழக்கப்படி செய்து கொள்ளலாம் என்று முடிவு காணப்பட்டது.
தற்போது, மீண்டும் திருவிழா நடத்தும் பொழுது அதே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனவே மாவட்ட கலெக்டர் இது தொடர்பாக கிராம முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, எங்கள் சமூகத்திற்கும் திருவிழாவின்போது, சாமி ஊர்வலம் இழுக்க, உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post குரும்பலூர் சாமி ஊர்வலத்தில் உரிமை கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.