மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ₹57 லட்சம் மதிப்பீட்டில் 15 பேருக்கு நலத்திட்ட உதவி

திருச்சி, டிச.24: திருச்சியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடா்பான மனுக்கள், கலைஞா் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகைகள் பெறுவது தொடா்பான மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடா்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கி கடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும் ஓய்வூதிய பயன், தொழிலாளா் நல வாரியம் தொடா்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 529 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ் வளா்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா முதல் நிலைப் போட்டியில் வெற்றி பெற்ற 9 நபா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், தொழிலாளா் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் குழந்தைகள் அரசு கல்லூரியில் பயில்வதற்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 1 நபருக்கு ₹50 ஆயிரமும், விபத்து மரணத்திற்கான உதவித்தொகை 2 நபா்களுக்கு ₹2 லட்சம் வீதம் ₹4 லட்சமும், விபத்து ஊனம் உதவித்தொகை 1 நபருக்கு ₹65 ஆயிரமும், இயற்கை மரண உதவித் தொகையாக 1 நபருக்கு ₹55 ஆயிரமும் என மொத்தம் 5 நபா்களுக்கு ₹57 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்.

நிகழ்வில், உதவி ஆட்சியா் அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் செல்வம், துணை கலெக்டர் நஜிம்முனிசா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் நடேசன், அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

The post மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ₹57 லட்சம் மதிப்பீட்டில் 15 பேருக்கு நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Related Stories: