போடி, டிச.24: தேனி மாவட்டம், போடி அருகே முத்தையன் செட்டிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோட்டைமலை(55). அங்குள்ள பள்ளி அருகே கோட்டைமலை மற்றும் அவரது தம்பி பாலு ஆகியோர் எதிரெதிரே மாட்டு கொட்டகைகள் வைத்துள்ளனர். இந்த நிலையில், கோட்டைமலை மாட்டு கொட்டகையில் இருந்து ஒரு மாடு கயிற்றை அவிழ்த்து சென்று எதிரே இருந்த மாட்டு கொட்டகைக்குள் புகுந்து அங்கிருந்த மாடுகளை முட்டி காயப்படுத்தி அங்கிருந்த புல், செடி, கொடிகளை தின்று சேதப்படுத்தியுள்ளது.
இதைப் பார்த்த கோட்டைமலை மாட்டைப் பிடிப்பதற்காக விரட்டியுள்ளார். அப்போது பாலு கோபமடைந்து கோட்டைமலையை தாக்கியுள்ளார். பதிலுக்கு கோட்டைமலை தனது மகன் அருணுடன் சேர்ந்து பாலுவை தாக்கியுள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொட்டகையில் மாடு புகுந்து சேதம் அண்ணன் தம்பி இடையே மோதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.