இன்ஜின் மீது மின்கம்பி சுற்றியதால் பரபரப்பு சென்னை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி

அருப்புக்கோட்டை: மின்கம்பி இன்ஜின் மீது விழுந்ததால் சிலம்பு எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக அருப்புக்கோட்டை வந்து சேர்ந்தது. சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு அருப்புக்கோட்டை வழியாக வாரத்திற்கு 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ரயிலை டிரைவர் மீட்டாலால் மீனா ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 5.10 மணிக்கு ரயில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொட்டியாங்குளம் பகுதியில் வந்தபோது அறுந்து தொங்கிய மின்கம்பி ரயில் இன்ஜின் மீது விழுந்து சுற்றியது. இதனால் ரயில் நகர முடியாமல் நின்றது. இதையடுத்து ரயில்வே பணியாளர்கள் இன்ஜினில் சுற்றியிருந்த மின்வயரை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தினர். இதனால் அருப்புக்கோட்டைக்கு அதிகாலை 5.20 மணிக்கு வர வேண்டிய ரயில் 2 மணிநேரம் தாமதமாக காலை 7.20 மணிக்கு வந்து சேர்ந்தது. மின்கம்பியில் மின்சப்ளை கொடுக்கப்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பயணிகள் சிலர் ரயிலில் இருந்து இறங்கி வெளியே காத்திருந்தனர். இதேபோல் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக காரைக்குடி செல்லும் பயணிகள் ரயிலும் அருப்புக்கோட்டையில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விருதுநகரில் இருந்து மானாமதுரை, மானாமதுரையில் இருந்து ராமேஸ்வரம், மானாமதுரையில் இருந்து திருச்சி இடையே மின்மயமாக்கல் பணி நடந்து வருகிறது. இதில் மானாமதுரை – மதுரை இடையே மின்மயமாக்கல் பணி முடிந்து ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மின்கம்பி செம்பு என்பதால் மர்ம நபர்கள் அறுத்து திருடி உள்ளனர். மீதமுள்ள கம்பிகள் இன்ஜினில் சிக்கி உள்ளது தெரிய வந்தது. இதுதொடர்பாக விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்….

The post இன்ஜின் மீது மின்கம்பி சுற்றியதால் பரபரப்பு சென்னை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: