ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்புணர்வு பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களை குறைப்பதற்கும், அது தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. தீண்டாமைக்கு எதிரான தீண்டாமை குற்றங்கள் மற்றும் வன்கொடுமை குற்றங்கள் பற்றியும் அதற்கான சட்டங்கள், குற்றம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பிற துறைகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும், காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்களும் விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், 2021ம் ஆண்டு முதல் இதுநாள் வரை 2500க்கும் மேற்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 56 விலையில்லா தையல் இயந்திரங்களும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் 21 வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை, இலவச வீட்டுமனை பட்டா, குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம் என பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறை மூலம் வன்கொடுமை தடுப்புச்சட்ட விதிகள் மற்றும் உதவித்தொகைகள், முன்னோடி மாவட்ட மேலாளர் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் தொழிற்கடன், கல்விக்கடன் மற்றும் பிற உதவிகள், சமூக நலத்துறை மூலம் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் தாட்கோ மூலம் வழங்கப்படுகிறது. கடனுதவி திட்டங்கள், பயிற்சிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து தங்களுக்கு அரசுத்துறை அலுவலர்கள் விளக்கவுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளாக திகழும் நீங்கள் தங்கள் ஊர் மக்களின் சார்பாக மேற்காணும் விவரங்களை ஈடுபாட்டுடன் கேட்டறிந்து மக்களிடம் அரசின் திட்டங்களை சேர்க்கவும், வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி தீண்டாமை இல்லாத மாவட்டமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், காஞ்சிபுரம் சப்-கலெக்டர் ஆசிக் அலி, போலீஸ் துணை எஸ்பி (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சங்கர் கணேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராஜசுதா, ஊராட்சி மன்றத்தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: