சுங்குவார்சத்திரத்தில் நாளை சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்: சிஐடியு மாநில செயலாளர் தகவல்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கடந்த செப்., மாதம் 30 நாட்களுக்கும் மேலாக ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு அக்டோபர் 14ம்தேதி வழக்கம்போல தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தில் இருந்து பணிக்கு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை உள்ளே முந்தைய பணி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

அதேபோல, சிஐடியு., தொழிலாளர்களை குறிவைத்து ஒழுங்கு நடவடிக்கையை மீறியதாக 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளது. நிர்வாகம் உருவாக்கியுள்ள இன்டர்னல் யூனியனில் இணைய தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளது.

தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், நிர்வாகத்தின் அழுத்தம் தாங்காமல் தொழிலாளர் ஒருவர் நேற்று இரவு தற்கொலைக்கு முயன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சாம்சங் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து நாளை (19ம் தேதி) தொழிற்சாலைக்கு உள்ளேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் அறிவித்துள்ளார்.

The post சுங்குவார்சத்திரத்தில் நாளை சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்: சிஐடியு மாநில செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: