வாலாஜாபாத் ஒன்றியம் வில்லிவலம்-தாங்கி இடையே சாலை விரிவாக்கம் செய்யப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் வில்லிவலம்-தாங்கி இடையே உள்ள குறுகிய சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்டது வில்லிவலம், தாங்கி ஊராட்சி இந்த இரண்டு ஊராட்சியின் சாலை வாலாஜாபாத்-காஞ்சிபுரம் சாலையை இணைக்கும் கூட்டுச்சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் இங்குள்ள கிராம மக்கள் நாள்தோறும் வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், இந்த இரண்டு கிராம மக்களின் பிரதான தொழிலாக விளங்குவது கால்நடை வளர்த்தல் மற்றும் விவசாயம். இந்நிலையில், இந்த வில்லிவலம் – தாங்கி சாலையை ஒட்டி இருபுறமும் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளநிலையில் தற்போது இந்த பிரதான சாலை குறுகிய சாலையாக காணப்படுகிறது.

இதனால், இடுபொருட்களை ஏற்றி வரும் டிராக்டர், லாரி உள்ளிட்ட பேருந்துகள் இந்த சாலை வழியாக சென்றால் எதிர்முனையில் வரும் வாகனங்கள் பின் சென்று செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றன. மேலும், சாலையின் இருபுறமும் ஐந்து அடிக்கும் மேல் பள்ளம் காணப்படுவதால் எந்த நேரத்திலும் விபத்து அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘வில்லிவலம், தாங்கி ஊராட்சிகளின் பிரதான சாலையாக விளங்குகிறது. இந்த சாலை வழியாகத்தான் இந்த இரண்டு கிராம மக்களும் நாள்தோறும் சென்று வருகிறோம். இந்நிலையில், இந்த சாலை குறுகிய சாலையாக உள்ளநிலையில் போக்குவரத்திற்கு கடும் சிரமமாக உள்ளன. இரு சக்கர வாகனத்தில் சென்றால் எதிரே கார் உள்ளிட்ட வாகனங்கள் வந்தால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர் கூட மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை இப்பகுதியில் காணப்படுகின்றன.

ஒருசில நேரங்களில் இருபுறமும் கார் டிராக்டர் அல்லது லாரிகள் வந்துவிட்டால் எந்த வாகனமும் செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலை குறுகிய சாலையாக உள்ளன. இதுபோன்ற நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளோம் இதுபோன்ற நிலையில் இதுவரை அரசு அலுவலர்கள் இங்கு ஆய்வு செய்து இந்த சாலையை விரிவாக்கம் செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’ என்கின்றனர். இது போன்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உடனடியாக விபத்து ஏற்படும் சூழலில் உள்ள இந்த சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத் ஒன்றியம் வில்லிவலம்-தாங்கி இடையே சாலை விரிவாக்கம் செய்யப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: