வரும் 25ம் தேதி முதல் படாளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை: எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை படாளம் கிராமத்தில் இயங்கி வருகிறது. அந்த ஆலை பல ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டம் ஏற்பட்டு மூடி இருந்தது. இந்நிலையில், மறைந்த திமுக தலைவர் கலைஞர், முதலமைச்சராக இருந்தபோது, ஆலையின் கடனை ரத்து செய்து திறப்பதற்கு நிதி வழங்கினார். அன்றிலிருந்து, கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு அரவை செய்து சர்க்கரை உற்பத்தி செய்து வருகிறது.  இந்த ஆண்டும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பாலாற்றங்கரையோரம் உள்ள கிராமங்களிலும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஓங்கூர் ஆற்றங்கரை ஓரம் உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களிலும் சுமார் 1.26 லட்சம் டன் கரும்புகள் விவசாயம் செய்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த கரும்புகள் அரவைக்காக மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு அனுப்ப உள்ளனர். இதன் காரணமாக, இந்த ஆண்டு மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை சீசன் வருகின்ற 25ம் தேதி தொடங்கப்பட உள்ளது என ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சர்க்கரை ஆலை அலுவலகத்தில் கரும்பு ஏற்றி வரும் வாகனப்பதிவு, விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்பட்ட கரும்பு பதிவு, வெட்டுவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கி வருகிறது. மேலும், கடந்த ஆண்டு ஒரு ஏக்கரில் அதிக எடை கரும்பு உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு பரிசுகளும் வழங்கியுள்ளது.

மேலும், சர்க்கரை ஆலையில் கரும்புச்சாறு பிழிந்த உடன் அதனை கொதிகலனில் வைத்து தீ மூட்டி இளம் சூடேற்றி கொதிக்க வைத்து பின்பு சர்க்கரையாக அரவை செய்யப்படுகிறது. ஆலை திறக்கப்பட உள்ளநிலையில் முன்னதாகவே ஆலையில் உள்ள கொதிகலெனில் தீ மூட்டு நிகழ்ச்சி செயல் ஆட்சியர் தமிழ்ச்செல்வி தலைமையிலும் கரும்பு பெருக்கு அலுவலர் ஜெகதீஷ் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு கொதிகலனில் தீ மூட்டினார். இந்த நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் சத்யசாய் உள்ளிட்ட ஆலை ஊழியர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். கரும்பு அரவைக்கான பணிகள் தொடங்க உள்ளதால், அதிகாரிகளின் மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post வரும் 25ம் தேதி முதல் படாளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை: எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: