கோவில்பட்டி, டிச. 16: தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பின்றி பாழாகும் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி – எட்டயபுரம் – மேலக்கரந்தை – அழகாபுரி – அருப்புக் கோட்டை – மதுரை தேசிய நெடுஞ்சாலை கடந்த 2007ம் ஆண்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இச்சாலை சுமார் 144 கி.மீ தூரமுடையதாகும். சாலையின் வழியோர கிராம நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை மற்றும் அணுகு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர சில முக்கியமான நிறுத்தங்களில் இலவச கழிப்பறை பயணிகள் நலன் கருதி கட்டப்பட்டுள்ளது. மேலும் இச்சாலை நான்கு வழிச்சாலை என்பதால் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கும், மறுமார்க்கமாக மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கும் தனித்தனி சாலை இரண்டு மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராம பேருந்து நிறுத்தத்திலும் மக்கள் பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்தும், வணிக வங்கிகள் உதவியுடனும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உதவியுடனும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அழகாபுரி கிராம நிறுத்த நிழற்குடை மேற்கூரை தகரம் உடைந்து தரையில் கிடக்கிறது. எஞ்சியுள்ள மேற்கூரை தகரமும் பிடிமானமின்றி பயணிகளை காவு வாங்கும் நிலையில் உள்ளது. இதேபோல் சிந்தலக்கரை, முத்துலாபுரம், மேலக்கரந்தை, வெம்பூர் போன்ற பல கிராம நிழற்குடைகள் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இத்தேசிய நெடுஞ்சாலை முத்துலாபுரம் விலக்கு, சிந்தலக்கரை விலக்கு, தாப்பாத்தி, மேலக்கரந்தையிலும் சாலை கிராம சாலைகளை விட மிகவும் மோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இவை தவிர மேலக்கரந்தை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் உயர்மட்ட பாலம் கட்டி விபத்துகளை தடுக்க வேண்டும். இச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடமிருந்து டோல்கேட் கட்டணம் மட்டும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது.
ஆனால் சாலை, நிழற்குடை, கழிவறை வசதியை முறையாக பராமரிப்பது இல்லை. எனவே தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை, சாலைகள், சுகாதார வளாகங்களை தரமான முறையில் பராமரிக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
The post தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பின்றி பாழாகும் பயணியர் நிழற்குடைகள் appeared first on Dinakaran.