காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், நத்தாநல்லூர் ஊராட்சியில் கைப்பம்ப் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், நத்தாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மணி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், ‘நத்தாநல்லூர் ஊராட்சியில் பழங்குடியின மக்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் வாழ்வாதாரத்திற்காக கைப்பம்ப் போடப்பட்டு, குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர், கைப்பம்ப் இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் பழங்குடியின மக்கள் கைப்பம்ப் இல்லாமல் குடிநீருக்காக இன்னலுக்கு ஆளாவதாகவும், அத்தியாவசியமான குடிநீரை கிடைக்காமல் தடுத்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நத்தாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அரங்கம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை தெரிவித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த நிலையில் இந்த போராட்டத்தை கைவிட மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். மேலும் உடனடி நடவடிக்கை இல்லை என்றால், ஒட்டுமொத்த பொதுமக்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.
The post கைப்பம்ப் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நத்தாநல்லூர் கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டம்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.