இந்நிலையில், இந்த 2 மசோதாக்கள் மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு 129வது சட்ட திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதவை ஒன்றிய சட்ட அமைச்சர் மேக்வால் மக்களவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளார். அரசியலமைப்பு 129வது சட்ட திருத்த மசோதாவில், ‘அடிக்கடி தேர்தல் நடப்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. இது ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் செலவை குறைப்பதோடு, மனிதவள விரயத்தையும் தடுக்க முடியும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 83 (மக்களவை பதவிக்காலம்), 172 (சட்டப்பேரவைகளின் பதவிக்காலம்), 327 (சட்டப்பேரவை தேர்தல்களில் மாற்றம் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்) ஆகியவற்றில் திருத்தம் செய்து, மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அனுமதிக்கும் வகையில் 82ஏ எனும் புதிய பிரிவு சேர்க்கப்படும்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அடுத்த மக்களவை தேர்தலுக்கு பிறகு, மக்களவை முதல் முறையாக கூடும் தேதியை ஜனாதிபதி அறிவிப்பார். இந்த அறிவிப்பு தேதி நியமன தேதி என அழைக்கப்படும். இந்த நியமன தேதியிலிருந்து 5 ஆண்டுகள் மக்களவை பதவிக்காலம் இருக்கும். அதே போல நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் மக்களவையின் முழு பதவிக்காலம் முடிவடைந்தவுடன் முடிவடையும்.
அதன் பிறகு, மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை மக்களவையோ அல்லது சட்டப்பேரவையோ, பதவிக்காலம் முடியும் முன்பு கலைக்கப்பட்டால், அதன் பதவிக்காலம் ஏற்கனவே நிர்ணயித்த காலாவதி காலம் வரையிலும் இருக்கும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
* நாட்டிற்கு நல்லதல்ல
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தாரிகாமி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்து இந்தியாவிற்கும், அதன் மிகப்பெரிய பன்முகத்தன்மைக்கு பாதுகாப்பு அளித்திடும் கூட்டாட்சி கட்டமைப்பிற்கும் எதிரானது. பன்முகத்தன்மையே இந்தியாவின் உண்மையான முகம். அதை சிதைக்கக் கூடிய ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டிற்கு நல்லதல்ல.
இந்த மக்கள் விரோத முடிவுக்கு எதிராக அனைவரும் தங்கள் அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டு குரல் கொடுக்க வேண்டும்’’ என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘‘வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் மிகப்பெரிய ஆயுதம் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’’ என்றார்.
The post அரசியலமைப்பு 129வது சட்ட திருத்தம் உட்பட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை தாக்கல்: ஒன்றிய அரசு பட்டியலிட்டது appeared first on Dinakaran.