செங்குன்றம் அருகே சேதம் அடைந்து காணப்படும் பேருந்து நிழற்குடை: சீரமைக்க கோரிக்கை

புழல்: செங்குன்றம் அடுத்த பம்மது குளம், சோலையம்மன் நகர் சந்திப்பு திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், பொதுமக்கள் வசதிக்காக சுமார் 10 ஆண்டுகள் முன்பு கடந்த அதிமுக ஆட்சியின் போது அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் திசையில் சோலையம்மன் நகர் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நிழற்குடை சரியாக பராமரிக்கப்படாததால் தற்போது மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. நிழற்குடை முழுவதுமாக மேலே உள்ள தகடு சீட்டுகள் பெயர்ந்து திறந்த நிலையில் காட்சி அளிக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இருக்கைகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து துருப்பிடித்து உடைந்து கிடக்கிறது.

இதனால் பேருந்து நிறுத்தத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் கடும் மழையிலும் நனைந்தபடி பேருந்துக்காக வெகு நேரம் நின்றபடி காத்திருக்கின்றனர். எனவே சேதம் அடைந்த நிலையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையை பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும். மேலும் பம்மது குளம் அம்பேத்கர் சிலை அருகில், செங்குன்றத்தில் இருந்து அலமாதி நோக்கிச் செல்லும் திசையில் பேருந்து பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்க சம்பந்தப்பட்ட மாதவரம் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செங்குன்றம் அருகே சேதம் அடைந்து காணப்படும் பேருந்து நிழற்குடை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: