தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று முழுவதும் விடிய விடிய மழை தொடர்ந்து பெய்ததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர்வரத்து பெருக்கெடுத்து ஓடிய நிலையில் மழைக்கு இரண்டு வீடுகள் இடிந்து சேதமானது.
தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தேனி மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கை காரணமாக நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா விடுமுறை அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதலே தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில் நேற்று அதிகாலை முதல் தேனி நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்தது. அதிகாலை முதல் நேற்று முழுவதும் வானம் இருண்டும், மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தேனி நகரில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தேனி நகர் பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலைகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் தலைச்சுமை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மிதமான மழை பெய்ததால் சாலைகளில் பெரும் அளவில் நீர் தேங்காவிட்டாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பெரிதும் பாதிக்கப்பட்டது.
தேனி நகர் மதுரை சாலையில் பங்களா மேடு துவங்கி அரண்மனை புதூர் பிரிவு மற்றும் புதிய மேம்பாலம் கட்டக்கூடிய பகுதிகளில் உள்ள சர்வீஸ் ரோடுகளில் மழைநீர் தேங்கியதால் இப்பகுதி சேரும் சகதியுமாக மாறியது. இதன் காரணமாக இச்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் பெரிதும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
தேனி நகரை ஒட்டிய பகுதியான குன்னூர் கிராமத்தில் பெரும்பாலான தெருக்களில் மழை நீர் வழிந்தோட வழி இல்லாததால் மழை நீர் தெருக்களில் தேங்கியது. இதனால் கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் படி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக தேனி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறு, முல்லைப் பெரியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் தேனி நகர் கம்பம் சாலையில் உள்ள கொட்டக்குடி பாலத்திற்கு கீழே பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆர்வமாக கூடினர். இதே போல குன்னூர் வைகை ஆற்று பாடத்தை தொட்டுவிடும் நிலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இப்பகுதியிலும் ஏராளமானோர் திரண்டு வெள்ளை நிறை பார்வையிட்டனர்.
தேனி நகர் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையில் நேற்று காலை மழை பெய்தது குறித்த பதிவு விபரம் வருமாறு: அரண்மனை புதூர் வினாடி 26 மில்லிமீட்டர் ,ஆண்டிபட்டி 42.2 மீ மீ,வீரபாண்டி 30.4 மிமீ பெரியகுளம் 54.2 மிமீ, மஞ்சுளாறு 31 மி.மீ. சோத்துப்பாறை 24 மிமீ, வைகை அணை 39 மிமீ, உத்தமபாளையம் 18.4 மி.மீ. போடி 29.4 மிமீ, கூடலூர் 33.6 மி.மீ. பெரியார் 101 மி.மீ. தேக்கடி 108.2 மி.மீ. சண்முக நதி 51 மி.மீ என மழை அளவு பதிவானது மாவட்டம் முழுவதும் சராசரியாக வினாடிக்கு 45.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து பெருக்கெடுத்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது இதில் வைகை அணை மொத்த உயரமான 71 அடியில் தற்போது 50.66 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது அணைக்கு வினாடிக்கு 11,180 கன அடி நீர் வரத்து ஏற்பட்டது அணையில் இருந்து வினாடிக்கு 69 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்பட்டது.
மஞ்சுளாறு அணையில் மொத்தம் உள்ள 57 அடியில் தற்போது 52.70 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. வினாடிக்கு 90 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோத்துப்பாறை அணையின் மொத்த உயரமான 126.28 அடி உயரத்தில் தற்போது 116.17 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது அணைக்கு வினாடிக்கு 88.56 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இதுபோல சண்முக நதியின் மொத்த உயரமான 52.55 அடி உயரத்தில் தற்போது 48.60 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி உள்ளது அனைத்து வினாடிக்கு 13 கண்ணாடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அணையிலிருந்து 14.47 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
2 வீடுகள் சேதம்
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து மாவட்டத்தில் பதிவாகும் மழை அளவு மற்றும் சேத விபரங்களை சேகரித்தது. இதன்படி நேற்று பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி அருகே காமக்காபட்டியில் உள்ள வைரமணி என்பவரின் வீடு இடிந்து சேதமடைந்தது.
இதேபோல உத்தமபாளையம் தாலுகா கம்பம் உத்தமபுரத்தில் உள்ள சிராஜ் தீன் மனைவி சகிலா பானுவின் வீட்டில் தகர வீடு இடிந்து சேதமடைந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் சேத விபரங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post விடிய விடிய தொடர்ந்து மழை பெய்ததால் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து கிடுகிடு appeared first on Dinakaran.