நெல்லை : நெல்லையில் நீர்வழிப் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படும் என வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் மாநகரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: மழைநீர் தேங்கி இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டு உள்ளது. ‘கட் அன் கவர்’ எனப்படும் மூடிய நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் சாலையின் இருபுறமும் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதற்கான கருத்துரு தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன். நெல்லை மாநகரில் நீர்வழிப்புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களால்தான் மழைநீர் தேங்கி வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதனை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளேன். அந்த பணிகளை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா விரைவில் செய்து முடிப்பார். ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு இருக்கும் இடங்களில் பொதுமக்கள் தங்குவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 3 இடங்களில் முகாம்கள் உள்ளன. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள முகாமில் தற்போது 15 பேர்தான் தங்கி உள்ளனர். அவர்களும் மழைநீர் வடிந்த பின்னர் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வெள்ளநீர் கால்வாய் மூலம் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளநீர் கால்வாயில் 2000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் எந்த விதமான பிரச்சினைகளும் பொதுமக்களுக்கு ஏற்படாது.
நெல்லையைப் பொருத்தவரை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளம் நீர் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே மழைநீர் வடிகால்கள் பிரச்சினையில் இருந்து சென்னையை மீட்டு கொண்டு வந்து இருக்கிறோம். அதுபோல் நெல்லையிலும் மழைநீர் வடிவால்வாய்கள் மேம்படுத்தப்படும். இந்த தொடர் மழைப்பொழிவு நின்ற பின்னர் அடுத்தடுத்து நெல்லையில் பணிகள் மேற்கொள்ளப்படும். எந்த புயல் வந்தாலும் நம்மால் எதிர்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், எம்எல்ஏ அப்துல்வகாப், மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ், நெல்லை மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா, போலீஸ் கமிஷனர் ரூபேஸ்குமார் மீனா, மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கேஆர் ராஜூ, நெல்லை திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர் கோகுலவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மழைநீர் சூழ்ந்த நெல்லை, டவுன், கல்லணை பள்ளி, சாந்தி நகர், நெடுங்குளம், திருப்பணிக்கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து முக்கூடல், அம்பை பகுதிகளிலும் ஆய்வு செய்தார். சாந்திநகரில் அமைச்சர் ஆய்வு செய்யும் போது முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் ஆகியோர் உடனிருந்தனர்.
The post நெல்லையில் நீர்வழி புறம்போக்கு நிலத்தில் கட்டிய ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படும் appeared first on Dinakaran.