கோத்தகிரி : கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலவிய அதிக மேகமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் தெரிந்து கொள்ள முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும் என கோத்தகிரி போக்குவரத்து போலீசார் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் அதிக மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் அதிக மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
தொடர்ந்து நீடிக்கும் மோசமான காலநிலை காரணமாக நேற்று மாலை நேரத்தில் அதிக மேகமூட்டம் நிலவிய நிலையில் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி, காவலர்கள் அப்பாஸ், சுரேஷ் ஆகியோர் வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும் எனவும், மலைப்பாதையில் காட்டு மாடு, காட்டு யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை பொறுமையுடன் இயக்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
The post கோத்தகிரியில் மேக மூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்களை இயக்க வேண்டும் appeared first on Dinakaran.