மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியிலிருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் கிளியாற்றில் செல்வதால் இரு சமநல்லூர் கிராமத்தில் வீடுகள் நீரில் மூழ்கியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 20 சென்டிமீட்டர் அளவிற்கு இரவு பகலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு கிளியாற்றிலும், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றதால் அந்த ஏரி விரைவாக நிரம்பியது. இந்த ஏரி ₹162 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி மற்றும் உபரிநீர் போக்கி பாசன மதகு உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் மதுராந்தகம் ஏரியிலிருந்து 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் கிளியாற்றின் வழியாக வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக, கிளியாற்றங்கரை ஓரம் உள்ள கிணார் ஊராட்சி, இருசமநல்லூர் கிராமத்தில் 10 வீடுகளும் நீரில் மூழ்கியது. இதனால், அந்த வீடுகளில் தங்கி இருந்தவர்கள் அருகில் இருந்த கோயிலில் தங்க வைக்கப்பட்டு ஊராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,கே.கே.புதூர் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட நெற்பயிரும் நீரில் மூழ்கியது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மழை வெள்ளம் சேதம் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மதுராந்தகம் ஏரியில் இருந்து 18 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றம்: வெள்ளநீரில் மூழ்கிய கிராமங்கள்: முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் appeared first on Dinakaran.