திலீப்புக்கு விஐபி தரிசனத்திற்கு அனுமதி அளித்தது யார் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இது தொடர்பாக போலீசும், தேவசம் போர்டும் விளக்கம் அளிக்கவும், திலீப் வந்தபோது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி கண்காணிப்பு கேமரா காட்சிகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் காட்சிகளை நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன் மற்றும் முரளி கிருஷ்ணா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
இதன்பின் நீதிபதிகள் கூறியது: திலீப் தரிசனத்திற்கு வந்தபோது மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது. பக்தர்கள் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது போன்ற ஆட்களுக்கு என்ன முன்னுரிமை இருக்கிறது? இதை எப்படி அனுமதிக்க முடியும்? பக்தர்களை தடுத்து நிறுத்தி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட எந்த அதிகாரிக்கும் உரிமை கிடையாது. இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, சபரிமலை நிர்வாக அதிகாரி, செயல் அலுவலர் உள்பட 4 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், அவர்களது விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். சபரிமலையில் முன் வரிசையில் யாருக்கும் விஐபி தரிசனம் அளிக்கக்கூடாது என்றும், இதை போலீசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் உறுதி செய்ய வேண்டும் என்றும் பின்னர் நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post நடிகர் திலீப் வந்ததால் மற்ற பக்தர்களுக்கு இடையூறு சபரிமலையில் விஐபி தரிசன அனுமதி அளிக்கக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு appeared first on Dinakaran.