தன்கருக்கு எதிராக தீர்மானம் மாஜி பிரதமர் தேவகவுடா பேச்சால் கடும் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தன்கருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தேவகவுடா பேச்சால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இருஅவைகளும் அமளியால் முடங்கி வருகின்றன. முதலில் அமெரிக்கா நீதிமன்றத்தில் அதானி மீதான குற்றச்சாட்டு, அதை தொடர்ந்து அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரஸ் மற்றும் காங்கிரஸ் தொடர்பு குறித்த புகார், தற்போது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக அவைகள் முடங்கி வருகின்றன.

நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் அவை நடவடிக்கை தொடர்பாக வழங்கப்பட்ட 5 நோட்டீஸ்களை அவைத்தலைவர் தன்கர் நிராகரித்தார். மேலும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் அவமதிப்பு பேச்சு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி அளித்த ஆறாவது நோட்டீசும் நிராகரிக்கப்படுவதாகவும் தன்கர் கூறினார். அதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் ஜே.பி. நட்டா, செய்தியாளர் கூட்டத்தில் தன்கரை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கடுமையாகக் கண்டித்தார்.

மேலும்,’அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், சோனியா காந்திக்கும் என்ன தொடர்பு? நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது’ என்றார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது சோனியா காந்தியும் அவையில் இருந்தார். நட்டாவின் கருத்துகளுக்கு பதிலளிக்க கார்கேவுக்கு தன்கர் அனுமதி அளித்தார். ஆனால் பா.ஜ எம்பிக்கள் அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியவில்லை. இதனால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் அவை மீண்டும் கூடியதும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன் விதி 251ஐ மேற்கோள் காட்டி, வங்கதேச விவகாரம் குறித்து பிரதமர் மோடி அவைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றார். அவர் பேச தன்கர் அனுமதி அளிக்காததால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அமளி செய்தனர். அதை தொடர்ந்து தேவகவுடாவை பேச தன்கர் அழைத்தார். ஆனால் அவரை பேச விடாமல் அமளி நீடித்தது.

அமளிக்கு மத்தியில் அவர் பேசும் போது,’ அவைத் தலைவர் எத்தனையோ முறை முறையிட்டும் அவர்கள் கவலைப்படவில்லை. இந்த மாதிரியான நடத்தையை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நமது ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கப் போகிறது. இதை அனுமதிக்க முடியாது. அவர்கள் பிரதமரை அவமதிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள், இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப கார்கே முயன்றார். கார்கே பேசும் போது,’அவை ஒழுங்காக நடைபெறவில்லை. ஜனநாயகம் இரண்டு சக்கரங்களில் ஓடுகிறது. ஒன்று எதிர்க்கட்சி, மற்றொன்று ஆளும் கட்சி. நீங்கள் நடுவர். ஆனால் நீங்கள் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்தால் அது நாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் பின்னடைவு’ என்று பேசிக்கொண்டு இருக்கும் போது அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து தன்கர் உத்தரவிட்டார்.

* கார்கே ஆவேசம்
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே கூறுகையில்,’ மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கான உரிமை மற்றும் கருத்து வெளிப்படுத்துதல் ஆகியவற்றை நசுக்குவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம். ஒவ்வொரு சக குடிமகனின் ஜனநாயக உரிமைகளையும் நமது புனிதமான அரசியலமைப்பையும் பாதுகாப்பதில் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* விமான திருத்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
இந்தியாவில் 90 ஆண்டுகள் பழமையான விமான சட்டத்தை மாற்றி அமைக்கும் பாரதிய வாயுயான் விதேயக் சட்டத்திற்கு இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவுக்கு டிச.11 அன்று ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

* அதானிக்கு எதிராக போராட்டம்
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

* மக்களவையில் அமளி
மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை பேச அழைத்த போது அவையில் ஏற்பட்ட அமளியால் மதியம் 1 மணி வரையும், அதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

* பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் திறமையான செயல்பாட்டை வலுப்படுத்துவதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த பல திருத்தங்கள் அவையில் நிராகரிக்கப்பட்டன.

* மன்னிப்பு கடிதம் கொடுத்தார் திரிணாமுல் எம்பி
ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு எதிரான கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். இந்த தகவலை அவைத்தலைவர் ஓம்பிர்லா தெரிவித்தாா்.

The post தன்கருக்கு எதிராக தீர்மானம் மாஜி பிரதமர் தேவகவுடா பேச்சால் கடும் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: