இந்த நிலம் பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கானது, வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறி ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி பர்மா இந்தியர்கள் வீட்டுவசதி கட்டுமான கூட்டுறவு சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்யுமாறு மாவட்ட கலெக்டரும், தாசில்தாரரும் உத்தரவுகளை பிறப்பித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவுகளை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, பர்மா இந்தியர்கள் வீட்டுவசதி கட்டுமான கூட்டுறவு சங்க நிலத்தை காலி செய்து, கண்ணகி நகரில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு குடிபெயரும்படி தாம்பரம் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து, தங்களை காலி செய்யும்படி தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆக்கிரமிப்பாளர்கள் முனியப்பன், பெருமாள், கன்னியப்பன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து முனியப்பன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் அதன் மீது உரிமைக்கோர முடியாது. அந்த வகையில் இந்த விவகாரத்தில் சிவில் வழக்கு மூலம் முடிவெடுக்க முடியும் என்று கூறுவதை ஏற்க முடியாது. தங்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை என மனுதாரர்கள் கூறும் நிலையில் அது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தின் மீது உரிமை கோர முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.