அணைக்கட்டு : காய், பழங்கள் மீது ரசாயன ஸ்பிரே அடித்து விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. தலைமையிடத்து துணை தாசில்தார் பழனி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார், பிடிஓ ஹேமலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: உழவு மானியம் ஆயிரமாக உயர்த்திவழங்க வேண்டும், சேதமடைந்திருக்கும் சேர்பாடி ஏரி கால்வாய் மதகை சீரமைக்க வேண்டும், அத்தியூர் அருகே விவசாய நிலத்தில் சாலை அமைப்பதை தடுக்க வேண்டும், அணைக்கட்டு தாலுகாவிற்கான நீதிமன்றம் பள்ளிகொண்டா பகுதியில் கட்ட வேண்டும் அங்கு அரசுக்கு சொந்தமான இடம் 24 ஏக்கர் உள்ளது.
வெட்டுவானம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும், விவசாயிகள் தரமாக விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் மீது ரசாயனம், ஸ்பிரே அடித்து ஏமாற்றி விற்பனை செய்வதை தடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி நீர்வரத்துக்கால்வாய்களை சீரமைத்து சரி செய்ய வேண்டும் மேலரசம்பட்டு அடுத்த தீர்த்தம்பொம்மல்சந்து பகுதியில் தனி நபர்கள் சிலர் அரசுக்கு சொந்தமான ஆற்று வழி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு பட்டா நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் தொந்தரவு செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம்: குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
தாசில்தார் மெர்லின் ஜோதிகா தலைமை தாங்கினார். வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து தணிக்கை பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வி.மீனா வரவேற்றார். இதில் விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த விவசாய பிரிவு நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
The post அணைக்கட்டு, குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் காய், பழங்கள் மீது ரசாயன ஸ்பிரே அடித்து விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ appeared first on Dinakaran.