கார்த்திகை தீப திருநாள் அகல்விளக்குகள் விற்பனை மும்முரம்

தஞ்சாவூர் : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை வெகு மும்முரமாக நடந்து வருகிறது.தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தஞ்சை பூம்புகார் நிலையத்திலும் விளக்குகள் விற்பனை நடைபெறுகிறது.

கார்த்திகை மாதமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோயில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது கார்த்திகை தீபத் திருநாளாகும்.திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வகையில் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கிறார்கள்.

கார்த்திகை தீபத்திருநாளில் வீடுகளின் வெளிப்புறங்கள், வீட்டின் முற்றத்திலும் அகல் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். நம் வீட்டிலுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கார்த்திகை தீபத் திருநாள் கொடுக்கும்.

இந்த தீபத்தை களிமண்ணால் செய்த அகல் விளக்குகளில் ஏற்றி வழிபாடு நடத்து வருகின்றனர். ஆனால் தற்போது மாறிவரும் காலத்தில் அகல் விளக்குகளை புறந்தள்ளி பீங்கான் மற்றும் மெழுகு ஆகியவற்றால் தயாரான விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும் மவுசு என்றால் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளுக்கு தான். தஞ்சாவூரிலும் மண் அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் கார்த்திகை தீபவிளக்குகள் தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பிய திசை எல்லாம் அகல் விளக்குகள் காய வைக்கப்பட்டு இருக்கும். கால்வைத்து நடக்க முடியாத அளவிற்கு அந்த தெருவில் அனைத்து வீடுகளின் வாசலில் காயவைத்து இருப்பார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. அங்கொன்றும். இங்கொன்றுமாக அரிதாக ஒரு சிலர் அகல் விளக்கு தயாரித்து வந்தனர்.

அகல் விளக்கு தயாரிக்கும் மண்பாண்ட தொழிலாளர் சுப்ரமணியன் என்பவர் கூறியதாவது: பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். கார்த்திகை தீபத்திற்காக அகல்விளக்கு செய்து வருகிறோம். ஒரு ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அகல் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. வழக்கமாக பித்தளையில் விளக்கு ஏற்றினாலும் கார்த்திகை தீபத்திற்கு மண் விளக்கேற்றுவார்கள்.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மண் விளக்குகளில் நவீன முறையில் வர்ணம் பூசி செய்து வருகிறோம். இந்த பகுதியில் 100 குடும்பங்கள் மண்பாண்டத் தொழில் செய்து வந்தோம். எல்லோரும் தொழிலை விட்டு சென்றதால் தற்போது 5 குடும்பங்கள் மட்டும் செய்துவருகிறோம்.

பாரம்பரிய தொழில் அழிந்து விடக்கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு செய்து வருகிறோம். வருமானம் மிகவும் குறைந்து விட்டதால் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். மண்கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. வைக்கோல் ஒரு கட்டு ரூ. 100க்கு விற்கபட்டது.

இன்று ரூ 300 வரை விற்கப்படுகிறது. 1000 ரூபாய்க்கு விற்ற மட்டை ரூ 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். மக்கள் விலை ஏற்றம்னு நினைக்காமல் அகல் விளக்கு வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும். எங்கள் வாழ்க்கை மக்கள் கையில் உள்ளது. அடுத்த தலைமுறைக்கு மண் அகல்விளக்கு செய்ய ஆளே இருக்காது என்ற நிலை உருவாகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கார்த்திகை தீப திருநாள் அகல்விளக்குகள் விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: