திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

*கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பங்கேற்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது.

அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, சமூக நல அலுவலர் (பொறுப்பு) சரண்யா, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சூர்யா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கல்வி உதவி, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, பயிர் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உதவி உபகரணங்கள், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 482 பேர் மனு அளித்தனர்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தரைதளத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய உதவிகளை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

கீழ்பென்னாத்தூர் தாலுகாவைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு மனு அளித்தனர்.
இந்நிலையில், குழந்தைகளுடன் மனு அளிக்க வந்திருந்த தாய்மார்களிடம் முன்னுரிமை அளித்து மனுக்கள் பெற ஏற்பாடு செய்தார். அதோடு, குழந்தைகளுக்கு கட்டணமின்றி ஆவின் பால் வழங்குவதை கலெக்டர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பேருக்கு சேமிப்பு பத்திரம் மற்றும் வரைவோலைகளையும், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ₹1 லட்சத்து 66 ஆயிரத்து 923 மதிப்பிலான ஆணைகளையும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் வங்கி புத்தகங்களையும் கலெக்டர் வழங்கினார்.

The post திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: