தஞ்சை பெரிய கோயில் மேம்பாட்டு பணிக்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு: குடிநீர், கழிவறை, செயற்கை புல் தரை அமைப்பு

தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்ல; வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கோயில் எதிர்புறம் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி மற்றும் கழிவறை வசதி சரியாக இல்லை என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

சிசிடிவி கேமரா, குடிநீர், மின் விளக்குகள், புதிதாக பொருத்த வேண்டும், கோயில் வலம் வரும் பாதையில் சாலை அமைத்து மின் விளக்குகள் பொருத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சுற்றுலா வளர்ச்சிக்காக தஞ்சைக்கு மத்திய சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், இரண்டு கழிவறைகளை புனரமைக்கவும், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தவும், புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பக்தர்கள் கோயிலுக்குள் நடந்து செல்ல ஏதுவாக தேங்காய்நார் விரிப்பு போடவும், தேவையான இடங்களில் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தவும் தொல்லியல் துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்துதல், சாலைகள் சீரமைப்பு, ராஜராஜன் பூங்காவை மேம்படுத்துதல், அகழி மேட்டை சீரமைத்தல், கழிவறைகள் புதுப்பித்தல், கோயில் வலம் வரும் பாதையை மேம்படுத்துதல், கோயிலின் முன்பகுதியில் பொருள் பாதுகாப்பு அறை, காலணி வைப்பகம், ஏடிஎம் மையம், பெத்தண்ணன் கலையரங்கத்தில் ஒலி பெருக்கி அமைத்தல், தஞ்சாவூர் அருங்காட்சியகம் புனரமைத்தல், கல்லணைக் கால்வாய் நடைபாதை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளன.

இது குறித்து தஞ்சாவூர் எம்பி முரசொலி கூறுகையில், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் செயற்கை புல் தரை அமைக்கும் பணிகள் பாதியிலேயே உள்ளது. மீதமுள்ள பணிக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ளது என்றார்.

The post தஞ்சை பெரிய கோயில் மேம்பாட்டு பணிக்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு: குடிநீர், கழிவறை, செயற்கை புல் தரை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: