திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை

திருவொற்றியூர்: திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மணலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மணலி, சின்னசேக்காடு குளக்கரை தெருவைச் சேர்ந்த ரகு என்பவரின் மகன் ஆனந்த் (26). அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆனந்த்தின் காதலி அவரிடம் சரியாக பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்த் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த மாதவரம் பால்பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்த்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: