ஒடுகத்தூர், டிச.8: ஒடுகத்தூர் அருகே பைக் விபத்தில் சிகிச்சை பலனின்றி வேன் டிரைவர் பரிதாபமாக பலியானார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(38), வேன் டிரைவர். இவரது மனைவி தீபா(29). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி சீனிவாசன் வேலை நிமித்தமாக ஒடுகத்தூர் சென்று விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
தொடர்ந்து, மடையாப்பட்டு அருகே உள்ள வனப்பகுதி வழியாக வந்தபோது முன்னாள் சென்ற பைக் மீது இவரது பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த சீனிவாசனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் புனிதாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post வேன் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் போலீஸ் கடும் எச்சரிக்கை ஒடுகத்தூர் அருகே விபத்தில் பலி appeared first on Dinakaran.